வாட்சப்பில் வீடியோ கால் மூலம் நடத்தப்படும் ஹேக்கிங்
வேலு சாமி (Author) Published Date : Oct 11, 2018 16:55 ISTதொழில்நுட்பம்
கடந்த 2014முதல் வாட்சப் செயலியானது 19 பில்லியன் டாலருக்கு பேஸ்புக் நிறுவனத்திற்கு கைமாறியது. இதன் பிறகு வாட்சப் பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக புது புது சிறப்பம்சங்களை வழங்கி வருகிறது. ஆனால் பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகள் மீது சமீப காலமாக பாதுகாப்பு குறைபாடு குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில் வாட்சப் செயலியிலும் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில தொழில்நுட்ப இணையதளங்கள் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆண்டிராய்டு மற்றும் iOS பயனாளர்களின் வாட்சப் செயலியில் இந்த குறைபாடு இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்பு வாட்சப் நிறுவனம் ஏற்பட்ட பிழையை சரிசெய்து விட்டதாக (Reuters) என்ற செய்தித்தாளுக்கு இமெயில் மூலம் பதிலளித்துள்ளது. இந்த பிழை குறித்து வாட்சப் நிறுவனம் அனுப்பிய பதிலில் "வாட்சப்பின் பாதுகாப்பு அம்சத்தை வலுப்படுத்த உலகத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள பாதுகாப்பு ஆய்வாளர்களை கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். வாட்சப் செயலியின் லேட்டஸ்ட் வர்சனில் உள்ள இந்த பாதுகாப்பு குறைபாட்டை உடனடியாக சரிசெய்து விட்டோம்" என்று வாட்சப் தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாட்டால் நேர்ந்த அசம்பாவிதம் குறித்த எந்த தகவலும் இல்லை என வாட்சப் சேவை அதிகாரி கூறியுள்ளார். ஆனால் கூகுள் நிறுவனத்தில் 'Project Zero'வில் பணிபுரிந்து வரும் 'Travis Ormandy' என்ற ஆய்வாளர், இந்த பிழையை கண்டுபிடித்து இதற்கு 'பிக் டீல் (Big Deal)' என்று பெயர் வைத்துள்ளார். இந்த பிழையினால் பயனாளர்களுக்கு வரும் வீடியோ கால் அழைப்பினை எடுத்தாலே (Attend) ஹேக்கிங் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.