ads
கூகுள் ப்ளஸ் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ள கூகுள்
புருசோத்தமன் (Author) Published Date : Oct 09, 2018 15:01 ISTதொழில்நுட்பம்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனம், உலகம் முழுவதும் பல செயலிகளை அறிமுகப்படுத்தி பயனாளர்களிடம் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கூகுள் நிறுவனத்தின் சமூக வலைதள செயலிகளுள் ஒன்றான கூகுள் ப்ளஸ் தளத்தை நிரந்தரமாக மூடுவதாக கூகுள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று அமெரிக்காவின் சில செய்தி தாள்களில் பயனாளர்களின் விவரங்களை கூகுள் ப்ளஸ் திருடுவதாக புகார் எழுந்தது.
இந்த செய்தி அடுத்த சில மணிநேரங்களிலே உலகம் முழுவதும் வைரலாக பரவியது.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த புகார் குறித்து கூகுள் நிறுவனத்திடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் நேற்று கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸை நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சுமார் 5 லட்சம் பயனாளர்களின் கணக்குகளில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் ப்ளஸ் செயலியை பராமரிக்கவும், மேம்படுத்தவும் தொடர்ந்து சவால்கள் அதிகரித்து வந்ததால் பயனாளர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய முடியாமல் இருந்து வந்தது.இதனால் கூகுள் ப்ளஸ் செயலியில் குறிப்பிட்ட அம்சங்களை வழங்க முடியவில்லை. இது போன்ற பல காரணங்களால் கூகுள் ப்ளஸ் செயலியின் சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு பகிரும் தகவல்கள் மட்டும் திருடப்பட்டுள்ளதாகவும், இதுவரை 5 லட்சத்திற்கும் மேல் பயனாளர்கள் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் ப்ளஸ் செயலியை பயனாளர்கள் வரும் ஆகஸ்ட் 2019 வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் பயனர்கள் தகவல்களை திருடுவதாக பொது மக்களிடம் பீதியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கூகுள் நிறுவன செயலியிலும் பயனர் தகவல் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.