ஆதார் தனி நபர் தகவலை திருட உதவும் மலிவான மென்பொருள்
வேலு சாமி (Author) Published Date : Sep 13, 2018 11:36 ISTதொழில்நுட்பம்
இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் இருந்து வங்கி முதல் அனைத்து துறைகளிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு விட்டது. ஒரு குடிமகனின் தனிநபர் தகவலால் 10 விரல் ரேகை மற்றும் முகவரி, படிப்பு போன்ற அனைத்து ரகசிய தகவல்களும் ஆதார் என்ற ஒற்றை சொல்லில் அடங்கியுள்ளது. இந்த ஆதார் அமல்படுத்தப்பட்ட பிறகு போலியான நபர் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் உள்ளது. தற்போது தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களிலும் ஆதார் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து தேவைகளுக்கும் இன்றியமையாததாக இருக்கும் ஆதாரின் பாதுகாப்பு அம்சம் வெறும் 2500 ரூபாய்க்கு உடைக்க படுகிறது. ஆம், 2500 ரூபாய்க்கு கிடைக்கும் மென்பொருளை கொண்டு எளிதாக ஆதாரின் பாதுகாப்பு அம்சத்தை மீறி தனிநபர் தகவல்களை திருடி விடுகின்றனர். இதனை 5நபர் கொண்ட மென்பொருள் நிபுணர் குழு நீண்ட நாட்களாக ஆதார் பாதுகாப்பு அம்சத்தை உடைக்கும் மென்பொருள்களை ஆராய்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1.3 பில்லியன் மக்களின் தனிநபர் தகவல்கள் வெறும் 2500 இல் விற்கப்படும் மென்பொருள் கொண்டு திருடும் அளவிற்கு நமது நாட்டின் பாதுகாப்பு வலுவற்றதாக உள்ளதா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்து சில ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) கோப்புகளை இணைக்கின்றனர்.
இதனை கொண்டு ஆதாரின் யூசர் ஐடி (User ID) மற்றும் பாஸ்வேர்ட் (Password) போன்றவற்றை ஹேக்கிங் செய்து பாதுகாப்பு அம்சத்திற்குள் நுழைந்து விடுகின்றனர். மேலும் இந்த மென்பொருளை கொண்டு GPS போன்றவற்றையும் செயலிழக்க செய்ய முடியும் என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த செய்தி வெகுவாக பரவி வருகிறது. இதனை அறிந்து ஆதார் பாதுகாப்பு துறை நிறுவனமான UIDAI விளக்கம் அளித்துள்ளது.
இந்த புகார் குறித்து ஆதார் கூறுகையில் "கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆதாரின் பாதுகாப்பு அம்சம் ஹேக்கிங் செய்யப்பட்டு விட்டதாக தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தியானது மற்றும் பொறுப்பற்ற செய்தியாகும். இது பொது மக்களின் திசை திருப்பும் முயற்சியாகும். நாங்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு அம்சத்தை அப்டேட் செய்து கொண்டே வருகிறோம். இதனால் ஆதார் டேட்டா பேஸை ஹேக்கிங் செய்வதாக வரும் செய்து முற்றிலும் வதந்தியாகும்" என்று ஆதார் இந்த செய்தியினை மறுத்துள்ளது.