உணவு பொருட்களை ட்ரான் மூலம் டெலிவரி செய்யும் உபர்
வேலு சாமி (Author) Published Date : Oct 13, 2018 05:30 ISTதொழில்நுட்பம்
உலகம் முழுவதும் 72 நாடுகளில் பொது மக்களுக்கு சேவை புரிந்து வரும் முன்னணி டாக்சி நிறுவனமான உபர் (Uber) விரைவில் இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பறக்கும் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது உபர் நிறுவனம் ஆளில்லாமல் ஓடக்கூடிய வாகனங்கள் மற்றும் பறக்கும் டாக்சி சேவை போன்ற போக்குவரத்து துறை சார்ந்த ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இதற்கான ஆராய்ச்சி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சேவையை அனைத்து இடங்களிலும் வழங்க முடியாது. மிக உயரமான கட்டிடங்கள் உள்ள நகரங்களில் மட்டுமே வழங்க முடியும். இந்த சேவை வழங்குவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக உபர் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.
தற்போது பொது மக்களிடம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் உபர் கால் டேக்சியை புக் செய்வதற்கு மொபைல் செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பறக்கும் டேக்சி சேவைக்கும் மொபைல் செயலியை வழங்கவுள்ளனர். பறக்கும் டேக்சி மட்டுமல்லாமல் உணவு பொருட்களை டெலிவரி செய்வதற்கும் ட்ரோன்களை அறிமுகப்படுத்த உள்ளனர். இந்தியாவில் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற மெட்ரோ நகரங்களில் முதற்கட்டமாக இந்த சேவையினை துவக்க உள்ளனர்.
தற்போது அதிகரித்து கொண்டு வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் கால் டேக்சி மற்றும் டெலிவரி போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல்களாலும், டிராபிக் சிக்னல் போன்றவற்றாலும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் கால் டேக்சி மற்றும் உணவு பொருட்களை டெலிவரி செய்வதற்கும் ட்ரோன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக உபர் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.