மோசடி செய்வதற்கு மிகவும் உதவியானதாக இருக்கும் ட்ரூ காலர் செயலி
புருசோத்தமன் (Author) Published Date : Sep 14, 2018 12:25 ISTதொழில்நுட்பம்
ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் செயலிகளுள் ஒன்று ட்ரூ காலர் செயலி. இந்த செயலி கடந்த 2009இல் அறிமுகப்படுத்தப்பட்டு 8 வருடங்களாக வாடிக்கையாளர்களிடம் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளின் பெயர், ஊர் போன்ற விவரங்களை அறிய மிகவும் உதவியானதாக இருக்கிறது. இந்த செயலியை வைத்து தகாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே அறிந்து விடுகின்றனர்.
தற்போது அனைத்து செயலிகளிலுமே நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். இதனால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ட்ரூ காலர் செயலி மூலமாக மோசடி சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. இந்த செயலியானது, ஒரு மொபைல் எண்ணை உலகின் எந்த மூலையிலும் இருக்கும் நபர் ஒருவர் தனது காண்டாக்ட் லிஸ்ட்டில் பதிவு செய்து வைத்திருந்தாலும் அதே பெயர் மற்றும் இதர தகவல்களுடன் மற்றவர்களுக்கு காண்பிக்கும்.
இது உதவியாக இருந்தாலும், மோசடி செய்வதற்கும் இந்த அம்சம் ஏதுவாக உள்ளது. இந்த அம்சம் மூலம் மோசடி செய்யும் நபர், தன்னுடைய மொபைல் எண்ணை மருத்துவம், காவல் துறை, வங்கி, நிதி போன்ற துறைகளில் வேலை பார்ப்பது போன்று பதிவு செய்யலாம். பின்னர் குறிப்பிட்ட நபரின் சுய விவரங்களை அறிய அவருக்கு இந்த எண்ணில் இருந்து கால் செய்து அவரிடம் கேட்டாலே போதும், அவரே தனது தனிநபர் ரகசியங்களை தெரிவித்து விடுவார்.
இது போன்ற குற்றங்கள் தற்போது நடந்து கொண்டு இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இதனால் போன் மூலமாக எந்த நபர் தங்களுடைய தகவலை தரும்படி கேட்டாலும் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றச்செயல்களை செய்வதற்கு ஏதுவாக இருந்தாலும் மறுபக்கம் ட்ரூ காலர் செயலியின் பாதுகாப்பு அம்சம் வலுவற்றதாக உள்ளது.
இதனால் ஹேக்கர்கள் எளிதாக ட்ரூ காலர் டேட்டா பேசை அணுகி வாடிக்கையாளர் தகவல்களை திருடலாம் எனவும் சைபர் க்ரைம் ட்ரூ காலர் செயலி மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சமீபத்தில் சீன மென்பொருள் செயலிகளை அரசு துறை அதிகாரிகள் பயன்படுத்த வேண்டாம் எனவும் இத்தகைய செயலிகளை மொபைலில் வைத்திருந்தால் உடனடியாக அவற்றை டெலிட் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டது. இந்த பட்டியலில் ட்ரூ காலரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.