மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் புதிய தொழில்நுட்பம்
வேலு சாமி (Author) Published Date : Oct 02, 2018 16:14 ISTதொழில்நுட்பம்
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க இறப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றன. முந்தைய காலங்களில் தொற்று நோய் பெரும்பாலான இறப்பிற்கு காரணமாக இருந்தது. ஆனால் கடந்த 2016இல் இருந்து இந்தியாவில் பெரும்பாலான இறப்பிற்கு காரணமாக மாரடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் இறப்புக்களில் 28.1 சதவீத இறப்புகள் மாரடைப்பால் ஏற்படுகின்றன.
இதனால் இருதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இருந்தாலும் சில நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு அதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. இந்த காரணம் தான் தற்போது புது தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தியுள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிய ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளது.
இந்த ஆய்வாளர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.இருதய நோய்க்கு மிக முக்கிய காரணமாக இருப்பது உடல் பருமன். இந்தியாவில் மட்டும் 30 மில்லியன் மக்கள் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் உழைப்பே இல்லாமல் ஒரே நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்கக்கூடிய வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் போன்றவை காரணமாகும். ஆய்வாளர்கள் குழு, உடல் பருமனால் அவதிப்படும் நோயாளிகளின் CT (computed tomography) ஸ்கேன் படங்களை ஆய்வு செய்தனர்.
இதில் உடலில் ரத்த குழாய்களை சுற்றி இன்ப்லேம்ட் பிளாக் (Inflamed Plaques) இருப்பது கண்டறியப்பட்டது. இது மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த ஆய்வினை அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் சுமார் 3900 நோயாளிகளிடம் மேற்கொண்டனர். இந்த ஆய்வின் மூலம் மாரடைப்பு ஏற்பட்ட சில நோயாளிகளுக்கு மட்டும் இன்ப்லேம்ட் பிளாக் (Inflamed Plaques) என்பது கரோனரி தமனியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்த வகை நோயாளிகள் மட்டும் இருதய நோயின் அபாய கட்டத்தில் உள்ளதை கண்டறிந்தனர். இதனை வைத்து அபாய கட்டத்தில் உள்ள இருதய நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்துள்ளனர். மற்ற முறைகளை ஒப்பிடும் போது, இதன் மூலம் நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதை ஒரு வருடத்திற்கு முன்பே துல்லியமாக கண்டறிந்து விடலாம். இது போன்ற ஸ்கெனிங் முறைகள் வருங்காலத்தில் இருதய நோயால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கு முக்கியமானதாக கருதப்படும். இந்த ஆய்வினை வைத்து நோயாளிகளுக்கு இருதய நோயின் நிலைய கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கலாம்.