சந்திராயன் 2 விண்கலம் திட்டத்திற்காக ஒன்று திரண்ட ஆய்வாளர்கள்
வேலு சாமி (Author) Published Date : Oct 01, 2018 17:38 ISTதொழில்நுட்பம்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, கடந்த 2008ஆம் ஆண்டில் அக்டொபர் மாதத்தில் சந்திராயன் 1 விண்கலத்தை பூமியின் துணைக்கோளான நிலவை ஆய்வதற்காக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் நிலவை பலமுறை சுற்றி வந்து நிலவின் முப்பரிமாண படங்களை எடுத்து ஆய்வாளர்களுக்கு அனுப்பியது. இதனை வைத்து ஆராய்ந்ததில் நிலவில் நீர் துளிகள் தோன்றி மறைவது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்திராயன் விண்கலத்தின் ஆய்வு காலம் இரண்டு ஆண்டுகள் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் ஓராண்டுக்குள்ளே கடந்த 2009இல் இந்த விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து நிலவில் இறங்கி ஆய்வு செய்யக்கூடிய வகையில் சந்திராயன் 2 விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்து வருகிறது. இந்த விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப பிரச்சனையால் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.
இந்த விண்கலத்தை பல ஆய்வுகளை மேற்கொண்டு உருவாக்க உள்ளனர். தற்போது இஸ்ரோவின் தலைநகரான பெங்களூரில் நடந்த கருத்தரங்கில் நாட்டின் அனைத்து இடங்களில் உள்ள பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் சந்தராயன் 2 விண்கலம் குறித்து ஆய்வாளர்கள் ஒன்று கூடி கலந்தாலோசித்துள்ளனர். இந்த கருத்தரங்கில் சந்திராயன் 2 எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.