தீப்பிடித்து எரிந்த புதிய சாம்சங் கேலக்சி நோட் 9 - சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்கு
வேலு சாமி (Author) Published Date : Sep 18, 2018 12:06 ISTதொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான கேலக்சி நோட் 9, உலகம் முழுவதும் விற்பனையில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த மாடலில் முதன் முறையாக நீடித்து உழைப்பதற்காக 4000mAH திறன் கொண்ட பேட்டரியை வழங்கியுள்ளது. ஆனால் தற்போது பேட்டரி பிரச்சனையால் லக்சி நோட் 9 திடீரென தீப்பிடித்து எரிந்ததாக சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. டியனே சங் (Diane Chung) என்ற பெண்மணி நியூயார்க்கில் உள்ள கியூன் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்டான இவருக்கு கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி எலிவேட்டரில் இருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் அளித்த புகாரில் "நான் எலிவேட்டரில் வந்து கொண்டிருக்கும் போது எனது கேலக்சி நோட் 9 திடீரென சூடானது. இதனால் அதை உபயோகிப்பதை தவிர்த்து எனது பர்சில் அதனை வைத்து விட்டேன். ஆனால் திடீரென பர்சில் இருந்து விசில் சத்தத்துடன் புகை வெளிவருவதை கண்டேன். நான் இறங்கும் இடம் வந்ததும் அதனை தூக்கி எறிந்துவிட்டேன்.
ஆனாலும் எனது ஸ்மார்ட்போன் தொடர்ந்து தீப்பொறியுடன் புகை வந்தபடியே இருந்தது. அதை கண்ட ஒருவர் போனை துணியால் சுற்றி ஒரு பாக்கெட்டில் வைத்திருந்து நீருக்குள் போட்டுவிட்டார். இதனால் எனக்கு தகுந்த இழப்பீடை சாம்சங் நிறுவனம் வழங்க வேண்டும். பேட்டரி பிரச்னை இருப்பதால் இந்த கேலக்சி நோட் 9 மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனையும் நிறுத்த வேண்டும்" என்று அவர் சாம்சங் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு புகார் அளித்துள்ளார்.
இந்த கேலக்சி நோட் 9 மாடல் ஸ்மார்ட்போன், சாம்சங் நிறுவனத்தின் முதல் 4000mAH பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதற்கு முன்பு வெளிவந்த கேலக்சி S9 மற்றும் கேலக்சி S9+ மாடல்கள் 3500 மற்றும் 3300mAH திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருந்தது. முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களிலே இந்த கேலக்சி நோட் 9 மிகவும் பாதுகாப்பானது, இதனால் பயனாளர்கள் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி குறித்து கவலை அடைய வேண்டாம் என சாம்சங் மொபைல் பிசினஸ் தலைவர் DJ கோஹ் என்பவர் கடந்த மாதம் தான் தெரிவித்திருந்தார்.
ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்த மாடல் ஸ்மார்ட்போனிற்கு சோதனைகள் வந்து விட்டது. இந்த பிரச்சனை முதல் முறை நடப்பதில்லை, ஏற்கனவே கடந்த 2016இல் சாம்சங் நிறுவனத்தின் நோட் 7 மாடல் பல இடங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் 2.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை சாம்சங் திரும்ப பெற்று கொண்டது. தற்போது மீண்டும் புதிய கேலக்சி நோட் 9 மாடலுக்கு இந்த பிரச்சனை வந்துள்ளது.