வெள்ள அபாயங்களின் போது மக்களை எச்சரிக்கும் கூகுள் பப்ளிக் அலர்ட்
புருசோத்தமன் (Author) Published Date : Oct 05, 2018 23:39 ISTதொழில்நுட்பம்
தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு கடற்கரை ஓரங்களில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட உள்ளது. இதனால் அரசாங்கம் முன்கூட்டியே வெள்ள அபாயம் ஏற்படும் இடங்களில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, வெள்ளத்தில் சிக்கி கொண்ட மக்களை காப்பாற்றுவதற்கு பேஸ்புக், கூகுள் மேப் போன்ற இணைய தளங்கள் பெரிதும் உதவியாக இருந்தது. இதன் பிறகு தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது போன்ற வெள்ள அபாயங்களின் போது மக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக கூகுள் பப்ளிக் அலர்ட் தளத்தையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியானது முன்னதாக அமெரிக்க, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, ஜப்பான், தாய்லாந்து, மெக்சிகோ மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்தது. இந்த செயலி தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின் போது மக்கள் தங்களது இருக்கும் இடத்தை சுற்றி எந்த மாதிரியான எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது,
அதன் அபாயங்கள் மற்றும் அதிலிருந்து தப்பிக்கும் வழிகள் போன்றவற்றை கூகுள் பப்ளிக் அலர்ட் மூலம் தெரிவித்து வருகிறது. இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் மொத்தமாக 20 சதவீத உயிரிழப்புகள் மட்டும் இயற்கை சீற்றங்களின் போது நடந்து வருகின்றது. இதனால் தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும், பொது மக்களை எச்சரிக்கை செய்யவும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.