காணாமல் போன மலேசிய விமானத்தை தேட உதவிய கூகுள் மேப்
வேலு சாமி (Author) Published Date : Sep 14, 2018 10:25 ISTதொழில்நுட்பம்
கூகுள் நிறுவனத்தின் வரைப்பட செயலியான கூகுள் மேப், கடந்த 2005 முதல் 13 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியானது பயன்படுத்துவதற்கு எளிதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்ததில் இருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு கூகுள் மேப் பெரிதும் உதவியானதாக இருக்கிறது. இந்த செயலியை கொண்டு பிரிட்டிஷ் தொழில்நுட்ப வல்லுனரான இயன் வில்சன் என்பவர் காணாமல் போன மலேசியா விமானம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார்.
இதற்கான ஆதாரத்தையும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். கடந்த 2014இல் மார்ச் 8ஆம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்கிற்கு சென்ற MH370 விமானம் திடீரென எதிர்பாராத விதமாக காணாமல் போனது. இது வரையிலும் காணாமல் போன விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலைமை என்ன, விமானம் எப்படி காணாமல் போனது என்ற கேள்விக்கான விடையை தேடி தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டே தான் இருக்கின்றது.
இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுநர் ஐயன் வில்சன் என்பவர் காணாமல் போன விமானத்தை கூகுள் மேப் செயலியை வைத்து இருக்கும் இடத்தை அறிந்துள்ளார். இந்த வரைபடத்தில் உள்ள விமானத்தின் அளவும் காணாமல் போன மலேசிய விமானத்தின் அளவும் ஒத்து போனது. இதனால் வரைபடத்தில் உள்ள விமானம் காணாமல் போன மலேசியா விமானமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களும் முடிவுக்கு வந்துள்ளனர்.
இதன் பிறகு வரைபடத்தில் உள்ள இடத்தை நோக்கி ஹெலிகாப்டர் உதவியுடன் காணாமல் போன விமானத்தை தேடி வருகின்றனர். ஆய்வாளர் குறிப்பிட்ட அடர்ந்த காட்டு மலை பகுதிக்குள் விமானத்தின் பாகங்கள் மற்றும் பயணிகளின் நிலைமை குறித்து அறிய தொடர்ந்து மூன்று வாரங்களாக தேடி வருகின்றனர். விரைவில் நல்ல செய்தி வரும் என்று ஆய்வாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.