ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது - செல்போனுடன் சேர்த்து கம்ப்யூட்டரையும் கண்காணிக்க உத்தரவு
வேலு சாமி (Author) Published Date : Dec 22, 2018 17:19 ISTதொழில்நுட்பம்
தற்போது நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற அனைத்து குற்றத்திற்கும் வாட்சப், பேஸ்புக் தகவல் பரிமாற்றம் காரணமாக அமைகிறது. இதனால் பொது மக்களின் வாட்சப் மற்றும் பேஸ்புக் உரையாடல் மட்டுமின்றி அழைப்புகளின் உரையாடலையும் குற்றவியல் தடுப்பு பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் தீவிரவாதிகளால் நாட்டிற்கு ஏற்படும் பல நாச வேலைகள் தடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போது செல்போன் மட்டுமின்றி மக்கள் உபயோகிக்கும் கம்ப்யூட்டரையும் கண்காணிப்பதற்கு உள்துறை மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு கூடுதல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சகமும் ஏற்று கொண்டுள்ளது. இதனால் செல்போன் மட்டுமல்லாமல் லேப்டாப்பையும் கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,
1. உளவுத்துறை (ஐ.பி.)
2. போதைபொருள் கட்டுப்பாட்டுத் துறை
3. அமலாக்கத்துறை
4. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம்
5. வருவாய் உளவுத்துறை
6. சி.பி.ஐ.
7. தேசிய விசாரணை ஆணையம்
8. ‘ரா’ உளவு அமைப்பு
9. சிக்னல் உளவுத்துறை
10. டெல்லி போலீஸ் கமிஷனர்
இந்த 10 அமைப்புகளும் நாட்டில் உள்ள தனிநபர் முதல் தனியார் நிறுவனங்கள் வரை உள்ள அனைத்து லேப்டாப் மற்றும் கணினியின் தகவல் பரிமாற்றத்தை உளவு பார்க்கும். ஏதேனும் தவறான செயல்கள் சார்ந்த தகவல் பரிமாற்றம் நிகழ்ந்தால் அதனை உடனடியாக அழிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதால் ஏராளமான பொது மக்கள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவிற்கு காங்கிரஸ் கட்சியும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது. இந்த செயல், இந்தியாவை அடக்கி ஆள வேண்டும் என்ற மோடியின் எண்ணத்தை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த கண்காணிப்பு ஏன் என்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. "பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவே இந்த கண்காணிப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். சந்தேக நபர்கள் மட்டுமே கண்காணிப்பிற்கு ஆளாவார்கள். இதனால் பொது மக்கள் தேவையில்லாமல் பயப்பட தேவையில்லை" என்று விளக்கம் அளித்துள்ளது.