கொசு தொல்லையை நிரந்தரமாக கட்டுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள கூகுள்
வேலு சாமி (Author) Published Date : Dec 13, 2018 17:41 ISTதொழில்நுட்பம்
தற்போதுள்ள சூழலில் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க கண்டுபிடிக்க முடியாத பல நோய்களும் உண்டாகின்றன. இதில் பெரும்பாலும் கொசுக்கள் மூலம் பரவி விலங்குகள், மனிதர்கள் போன்ற அனைத்து உயிர்களையும் தாக்குகிறது. இந்த கொசுக்கள் நீண்ட காலங்களாக மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், பறவைகளுக்கும் தொல்லையாகவே இருந்து வருகிறது. இதனால் எந்த பயனும் இல்லாமல், ஆபத்தை மட்டும் விளைவிக்கும் இந்த கொசு இனத்தை முழுமையாக அழிக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளது. கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி விட்டால் கொசு இனம் பெருகி வருவது குறைந்து முழுமையாக ஒழித்து விடலாம் என்பதே இந்நிறுவனத்தின் திட்டம். இந்த திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக கலிபோர்னியாவில் உள்ள ஒரு பகுதியில் ஏட்ஸ் எகிப்ட்டி (Aedes aegypti mosquitoes) என்ற கொசு இனத்தினை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண் கொசுக்களின் உடம்பில் வோல்ப்ஸியா(Wolbachia) என்ற பாக்டிரியாவினை செலுத்தி பறக்க விட்டுள்ளனர்.
இந்த ஆண் கொசுக்களின் உடம்பில் உள்ள பாக்டிரியா பெண் கொசுக்களின் உடம்பில் சென்ற பிறகு, பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் குஞ்சு பொறிக்கும் திறனை இழந்து விடும். இதனால் கொசு இனம் பரவாமல் கட்டுப்படுத்தலாம். இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. சோதனை செய்யப்பட்ட இடத்தில் பெண் கொசுக்கள் இட்ட முட்டைகளை ஆய்வாளர்கள் சோதித்ததில் அதில் முட்டைகள் குஞ்சு பொறிக்கும் திறனை இழந்து காணப்பட்டது. இப்படி செய்வதால் கொசு இனம் கட்டுப்படுத்தப்படும், ஆனால் கொசுக்கள் அழிந்து விட்டால் பின்விளைவு என்ன நடக்கும் என்பதே ஆய்வாளர்களின் தற்போதைய சந்தேகம்.