ads
இனி இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அளவில்லாத இன்டர்நெட்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 24, 2018 11:07 ISTதொழில்நுட்பம்
முகேஷ் அம்பானியின் ஜியோ வந்ததில் இருந்து இந்தியாவில் மக்களுக்கு இன்டர்நெட் என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால் இந்த இன்டர்நெட் இந்தியா முழுவதும் கிடைக்கிறது என்றாலும் கிராமங்களில், நெட்வொர்க் கிடைக்காத இடங்களில் இன்டர்நெட் என்பது என்ன என்பதை கூட தெரியாமல் தான் உள்ளனர். நாம், நகர் புறங்களில் இருக்கும் போது கிடைக்கும் இன்டர்நெட் வேகம் கிராமங்களில் மிக குறைவாகவே கிடைக்கிறது.
சில சமயங்களில் டவர் பிரச்சனையால் சிம்மை உபயோகப்படுத்த முடியாமலே போய் விடுகிறது. இது ஜியோ மட்டுமல்லாமல் இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இதே கதி தான். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெங்களூரை சேர்ந்த ஆஸ்ட்ரோம் நிறுவனம் களமிறங்கியுள்ளது. தொடக்க நிறுவனங்களுள் (Startup Company) ஒன்றான ஆஸ்ட்ரோம் (Astrome) என்ற நிறுவனம் இந்தியாவின் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றது.
இந்நிறுவனம் தற்போது 200 மைக்ரோ செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் செல்போன் டவர்கள் இல்லாமலே நேரடியாக செயற்கைகோள் மூலம் இன்டர்நெட் உபயோகப்படுத்த முடியும். நாம் தற்போது இன்டர்நெட்டை செயற்கைகோள் மூலமே உபயோகப்படுத்தி வருகிறோம் என்றாலும், அது நேரடியாக கிடைப்பதில்லை. இதனை பெறுவதற்கு தனியாக செல்போன் டவர்கள் இருக்க வேண்டும்.
இதனால் அனைவருக்கும் டவர் மற்றும் இன்டர்நெட் கிடைக்க வேண்டும் என்று ஏராளமான செல்போன் டவர்களை அமைத்து வருகிறோம். இந்த டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சுகளை தாங்கமுடியாமல் ஏராளமான விலங்கினங்கள் மற்றும் பறவைகள் நோய்வாய் பட்டு இறந்து விடுகின்றன. சில இனங்கள் அழிவின் உச்சத்திற்கே சென்று விட்டன. தற்போது ஆஸ்ட்ரோம் நிறுவனத்தின் புது முயற்சி செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக இன்டர்நெட்டை செயற்கைகோள் மூலம் கிடைக்க வழிவகை செய்கிறது.
இதன் மூலம் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும், கிராமங்களில் இன்டர்நெட் இல்லையே என்று கவலை பட தேவையில்லை. இது தவிர ஏராளமான விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் நன்மை பயக்கும். பெங்களூரை சேர்ந்த ஆஸ்ட்ரோம் நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதற் செயற்கை கோளினை விண்ணில் செலுத்த உள்ளது. இதன் பிறகு மீதமுள்ள செயற்கைகோள்களை வரும் 2021ஆம் ஆண்டிற்குள் விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது.