பாஜக வெற்றி குறித்து வைகோ, திருமாவளவன் கருத்து
கார்த்திக் (Author) Published Date : May 27, 2019 11:41 ISTPolitics
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் போட்டியிட்ட கணேசமூர்த்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, திமுகவின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது.
இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியால் ஊடுருவ முடிந்தாலும் திராவிட கோட்டையான தமிழகத்தில் ஒரு நாளும் காலூன்ற முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை திராவிட முன்னேற்ற கழகத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று கோடான கோடி மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளும் இதையே வெளிக்காட்டுகின்றன. மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசின் நாட்கள் எண்ணப் படுகின்றன என்றும் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூடிய விரைவில் முதல்வர் ஆவார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வருகின்ற ஜூன் மாதம் நடக்கவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மதிமுகவிற்கு ஒரு உறுப்பினர் வழங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. திமுகவின் மற்றுமொரு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். மிகுந்த இழுபறி நிலையில் போய்க்கொண்டிருந்த வாக்கு எண்ணிக்கையில் இறுதியாக, சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இதற்கிடையில், பாஜக செய்தி தொடர்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்,
திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆக்கபூர்வமான விஷயங்கள் எதுவும் செய்யப் போவதில்லை. அதிகபட்சமாக வெளிநடப்பு செய்வார்கள் என்று கிண்டல் அடித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவன் கூறியதாவது, அவர்கள் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஏதேதோ உளறுகிறார்கள் என்றார். மேலும், தேர்தலில் தோற்றுப்போவோம் என்று தெரிந்திருந்தும் தமிழகத்தில் தாமரை மலரும் என்று மீண்டும் மீண்டும் தமிழிசை சொல்லிவந்ததை அவர் நினைவு கூர்ந்தார். குளம், குட்டைகளில் வேண்டுமானால் தாமரை மலரும். தமிழ் நிலத்தில் ஒரு போதும் தாமரை மலராது என்றும் அதற்கு விளக்கமளித்தார்.
மேலும், தமிழகத்தில் ஓரணியாக காங்கிரஸோடு கூட்டணி வைத்தது போல, பிற மாநிலங்களிலும் கூட்டணி வைத்திருந்தால் பாஜகவை புறமுதுகு காட்டி ஓடச்செய்திருக்க முடியும். சிதறி நின்ற காரணத்தால், பாஜகவின் எதிர்ப்பு வாக்கு வங்கி 2014 தேர்தலில் சிதறியதைப் போல, இந்தத் தேர்தலிலும் சிதறி விட்டது. அதோடு, மின்னணு வாக்கு இயந்திரங்களை முறையாக தேர்தல் ஆணையம் கையாளவில்லை என்பது வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்னரே தெரிந்து விட்டது. இவை அனைத்தும் பாஜகவின் தனிப் பெரும்பான்மைக்கு காரணமாக அமைந்து விட்டது.
தமிழகம் மட்டுமல்ல, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. அவர்களின் அவதூறு பிரச்சாரங்கள் எடுபடவில்லை. தமிழகம் சமூக நீதிக்கான மண். பெரியார் போன்ற தலைவர்களைக் கொண்டாடும் மண். இந்த மண்ணில், ஜாதி, மத வெறி சக்திகளால் ஒரு போதும் வெல்ல முடியாது என்பதை தமிழக மக்கள் மீண்டும் உணர்த்தி இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், திண்டுக்கல் மற்றும் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெல்ல வைத்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.