நீட் தேர்வு 2019: அரசியல் கட்சிகள் கவனத்திற்கு
புருசோத்தமன் (Author) Published Date : May 07, 2019 14:07 ISTPolitics
நீட் தேர்வு 2019, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் நீட் தேர்விற்கு அதிகம் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நீட் தேர்வால் பாதிப்பு அடைந்த மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர்களை விட அரசியில் கட்சிகள் காண்பித்த எதிர்ப்புகளும் போராட்டங்களும் மிக அதிகம். இவர்களின் போராட்டம் பல்வேறு கோணங்களில் இருந்தது.
எந்த ஒரு திட்டம் வந்தாலும் ஆளும் கட்சி இருக்கையில், எதிர்க்கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். வரும் திட்டம் நல்லதா, மக்களுக்கு பயன் உள்ளதா என்பதை விட, ஆளுங்கட்சிக்கு எதிர்பு தெரிவிப்பதே நோக்கமாக இருக்கும். ஆட்சியில் இல்லாத மற்ற கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும், ஒரு சில கட்சிகள் நேர்மையாகவும், வரும் திட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு புரியும் வகையில் புரிய வைத்து, திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்.
நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று என்பதே அனைவரின் ஒருமித்த கருத்து. இதை கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் மூலம் மக்கள் புரிந்துகொள்ளும் சூழலில் இல்லை,மக்கள் விழிப்புணர்வுடன் தான் உள்ளனர். இப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள், அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் சரி - ஆட்சியில் இல்லாமல் இருந்தபோதும் சரி, தேர்தல் பிரச்சாரத்தின் போது இதுபோன்ற திட்டங்களை பகடைக்காயாக உபயோகித்து கொள்வார்கள்.
நீட் தேர்வு நல்ல திட்டமாக இருந்தாலும் அல்லது தேவையில்லாத திட்டமாக இருந்தாலும் சரி நீட் தேர்வை எந்த ஒரு கட்சியினாலும் தடுக்க முடியவில்லை. ஆனால் நீட் தேர்விற்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளையோ அல்லது பெற்றோர்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம், ஆனால் அப்படி இந்த ஒரு கட்சியும் செய்வதில்லை.
ஏன் இந்த உதவி தேவை: நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் யாவரும் அதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. தமிழகத்தில், பிற மாவட்டங்களில் இருந்து அவர்கள் இதுவரை வந்திராத மாவட்டத்திற்கு தான் தேர்வு எழுத வருகிறார்கள். அவ்வாறு வரும் மாணவர்கள், தேர்விற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாகவே பெற்றோர்களுடன் வருகிறார்கள். இவர்கள் அமர்ந்து படிக்கவோ அல்லது சிறுநீர் கழிப்பதற்கோ எந்த ஒரு வசதியும் பள்ளியில் தரப்படுவதில்லை.
பள்ளிகள் அனைத்தும் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், அனாவசியமாக யாரும் உள்ளே நுழையாதபடி பார்த்துக்கொள்வார்கள். இவ்வாறு மாணவர்களும், தேர்வு முடியும் வரை காத்திருக்கும் பெற்றோர்களுக்கும் ஏன் அரசியில் கட்சிகள் உதவ முன்வருவதில்லை ? தேவையில்லாத போராட்டம் நடத்தி கட்சிகள் மக்களுக்கு உதவுகிறோம் என்பதை விட, நீட் தேர்வின் போது அவதிக்குள்ளாகும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவினால் கண்டிப்பாக கட்சிகளுக்கு ஓட்டுகள் கிடைக்கும்.
பாஸ்போர்ட் எடுக்கும் போது பெரியவர்கள் சில சமயங்களில் ஆவணங்களின் பிரதிகளை எடுத்துவர மறந்து இருப்பார்கள். இவர்களுக்கு உதவிட, அங்கேயே பிரதிகள் எடுக்கும் இயந்திரங்கள் இருக்கும், சுலபமாக எடுத்துக்கொள்வார்கள், எங்கேயும் அலைய தேவையில்லை. ஆனால் சிறுவயது மாணவர்கள் எழுதும் நீட் தேர்வில் ஆதார் பிரதி இல்லையென்றால் ஏன் எடுப்பதற்கு பள்ளிக்கொரு பிரதி இயந்திரங்கள் இல்லை? இந்த உதவி ஏன் அரசியல் கட்சிகள் செய்வதில்லை.
வேறு மாவட்டத்தில் இருந்து கோவையில் தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவனிடம் ஆதார் பிரதி இல்லாதலால் வெளியே அனுப்பட்டான், தேர்விற்கு நேரம் இருந்ததால் மாணவனின் தாய் பிரதி எடுக்க அலைந்தபோது, அறிமுகமில்லாத புதிய மாவட்டம் என்பதாலும், ஞாயிறு விடுமுறை என்பதலால் சரியான நேரத்திற்கு வரமுடியவில்லை. இரண்டு மணிக்கு தேர்வு எழுத வேண்டிய மாணவன், 2.15 மணிக்கு சென்றதால் - தேர்வு எழுத அனுமதிக்க படவில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் அழுதுகொண்டே சென்றது நீட் தேர்வை வைத்து அரசியில் நடத்தும் கட்சிகளுக்கு புரியுமா...