Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

கமல்ஹாசனை விஜயகாந்துடன் ஒப்பிடலாமா ?

கமல்ஹாசன்

அரசியலுக்கு எப்போது வருவார் என்று திரையுலக ரசிகர்கள் பலரும் ரஜினியை எதிர்நோக்கும் சமயத்தில், எவரும் எதிர்பார்த்திராதவாறு நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி ஆரம்பித்து 14 மாதங்களே ஆன நிலையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது காலத்தின் கட்டாயமாக இருந்தது. எனினும், அதற்குள் தமிழ்நாடு எங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கட்சியைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார், கமல்.

ஆளும் கட்சிக்கு எதிரான அலை மக்கள் மத்தியில் இருந்ததால், எதிர்க்கட்சிகளின் வாக்குவங்கி இந்தத் தேர்தலில் உயர்ந்துள்ளது கண்கூடு. அவ்வகையில், புதிதாக களம் காணும் மநீம  கட்சி, பெரும்பாலான இடங்களில் 3வது இடம் பிடித்தது அரசியல் வித்தகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னையில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதுமாக, தோராயமாக 4 சதவீத வாக்குகள் இந்தக் கட்சிக்கு கிடைத்திருக்கின்றன. நகர் புறங்களில் பதிவான வாக்குகளில் மநீம கட்சியும் கிராமப்புறங்களில் அமமுக, நாம் தமிழர் போன்ற காட்சிகளும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். 

எம்.ஜி.ஆர், விஜயகாந்த வழியில் அடுத்ததாக, ரஜினிகாந்த் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசன் வந்திருப்பது தமிழக மக்களுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. திராவிட காட்சிகளுக்கு மாற்று சக்தியாக தேமுதிக வை முன்னிருத்தி கடந்த 2006ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்த விஜயகாந்த் அவர்களுக்கு 8 சதவீத வாக்கு வங்கி கிடைத்தது. 

அந்த அளவிற்கான வாக்குகளை தன்னுடைய முதல் தேர்தலில் கமல்ஹாசன் பெறவில்லை. காரணம், விஜயகாந்த் அவர்களுக்கு கிராமப்புறங்களில்  நல்ல வாக்குவங்கி இருந்தது. ஆனால், கமலுக்கு நகர்ப்புறங்களில் தனது செல்வாக்கை நிரூபித்து இருக்கிறார். எனினும்,  கமலின் எதிர்கால அரசியலுக்கு இந்தத் தேர்தல் நல்லதொரு அடித்தளம் போட்டிருக்கிறது என்பதை நாம் மறுக்க இயலாது. 

இது ஒரு புறம் இருக்க, இந்தத் தேர்தலில் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்குவங்கியை தேமுதிக பெற்றிருப்பதால், மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதோடு, இனி வரும் தேர்தல்களில் முரசு சின்னம் அந்தக் கட்சிக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 2014 முதல் தொடர் தோல்விகள், விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாது போனது, கட்சியின் நிர்வாகத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் போன்ற பல்வேறு காரணங்களால் கட்சியைப் பற்றி எந்தப் பேச்சும் இல்லாமல் போயிருக்கிறது. 

தனித்து நின்றுருந்தாலோ சரியான கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலோ தேமுதிகவிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது தமிழக மக்களின் கருத்து.

கமல்ஹாசன், தான் பெற்றிருக்கும் வாக்கு வங்கியை வைத்து அடுத்த தேர்தலுக்குள் தனது கட்சியை மேலும் வலுப்படுத்துவாரா அல்லது விஜய்காந்தைப் போல கூட்டணிக்காக  பேரம் பேசுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தத் தேர்தலில், கமலின் மீதுள்ள எதிர்பார்ப்பை விட மோடிக்கு எதிரான குரலே தமிழகம் எங்கும் ஒலித்தது. அதன் வெளிப்பாடாகவே, தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் தேனி தொகுதியைத் தவிர பிற தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. 

கமலுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு அளிப்பதை விட அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் வாக்களித்தால்  ஏற்புடையதாக இருக்கும் என்று சில வாக்காளர்கள் கருத்து தெரிவித்தனர்.

அடுத்த தேர்தலுக்கு ரஜினி தேர்தல் களம் காணும் சூழலில் கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு ஆர்வம் எழுந்துள்ளது.

கமல்ஹாசனை விஜயகாந்துடன் ஒப்பிடலாமா ?