ஆரோக்கியமான தின்பண்டங்கள் மட்டுமே வழங்கப்படும்: மத்திய சுகாதார அமைச்சர் உத்தரவு
ராம் குமார் (Author) Published Date : Jun 29, 2019 16:26 ISTPolitics
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தனது அமைச்சகத்திலும், துறைசார்ந்த கூட்டங்களிலும் பிஸ்கட் விற்பனைக்கு தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் வறுத்த சன்னா, பாதாம், பேரிச்சபழங்கள் மற்றும் அக்ரூட் போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்குமாறு சுகாதார துறையை கேட்டு கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவில், "உத்தியோகபூர்வ கூட்டத்தில் மட்டுமே ஆரோக்கியமான தின்பண்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பிஸ்கட் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் விரும்பியுள்ளார்" என்று அமைச்சகம் கூறியுள்ளது.
அந்த உத்தரவில்,இனி வரும் காலங்களில், துறைசார் கேன்டீன்கள் மூலம் பிஸ்கட் விநியோகிக்கப்பட மாட்டாது என்றும் வறுத்த பட்டாணி, பாதாம், அக்ரூட், பேரிச்சபழங்கள், நிலக்கடலை போன்ற உணவு பண்டங்களை துறை சார்ந்த உத்தியோகபூர்வ கூட்டங்களில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட் புட் ஆரோக்கிய பிரச்சினைகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டு பல வழிகளில் வாழ்வதை பாதிக்கிறது. இவ்வாறான உணவை உட்கொள்வது உடல் பருமன், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கின்றது. எனவே ஆரோக்கிய உணவு பழக்க முறையை நடைமுறை படுத்த இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நடவடிக்கையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அமைச்சர் ஒரு மருத்துவர் என்பதால், ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதால் ஏற்படும் மோசமான விளைவை அறிவார். எனவே இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சில் நாங்கள் இந்த உத்தரவை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.