ads
அதிமுக ஆட்சிக்கு ஆபத்து இல்லை, சில ஆயிரம் வாக்கு வித்தியாசங்களில் ஆட்சியை தக்கவைத்தது
கார்த்திக் (Author) Published Date : May 25, 2019 17:10 ISTPolitics
2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் சட்டசபைக்கான 22 இடைத்தேர்தல்கள் நடந்தன. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர்வாரா என்று தீர்மானிக்கக் கூடிய மினி சட்டசபை தேர்தலாகவே இந்த இடைத்தேர்தல்கள் பார்க்கப்பட்டன. பொதுவாக நடக்கும் தேர்தல்களில், வாக்குகள் எண்ணும் நாளின் மதிய வேளையிலேயே முடிவுகள் தெரிந்து விடும். ஆனால், 22 இடைத்தேர்தல்களில் 6 இடங்களில் இழுபறி நீடித்த வண்ணம் இருந்தது.
இதனால், மாலை 7 மணி வரை ஒரு உறுதியான முடிவை எதிர்பார்க்க முடியாமல் போனது. எனினும், இறுதியில், இந்த இழுபறி நிலை அதிமுக அரசிற்கு சாதகமாக முற்றுப்பெற்றது. நாங்குநேரி எம்.எல்.ஏ வசந்த குமார் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒரு இடைத் தேர்தலை தமிழகம் சந்திக்க உள்ளது. ஆனால், இவை எல்லாம் நடப்பதற்கு சிறிது காலம் பிடிக்கும்.
எனினும், நாங்குநேரியைத் தவிர்த்து தற்போது 233 தொகுதிகள் உள்ளன என்று எடுத்துக்கொள்ளலாம். இதில், 117 இடங்களை ஆளும் அதிமுக பெற்றிருந்தால் மட்டுமே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். தேர்தல் நடப்பதற்கு முன்பாக, அதிமுகவின் பலம் 114 ஆக இருந்தது. ஆனால், அதில் 5 அதிருப்தி MLAக்களும் அடக்கம். அதையும் கழித்து விட்டுப் பார்த்தால், 109 என்று கொண்டால், அதிமுகவிற்கு 8 இடங்களை இந்த இடைத்தேர்தல்களில் கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது. ஆனால், 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
எனினும், சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலேயே இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க, திமுக கூட்டணியின் பலம் 97 ஆக இருந்து தற்போது 13 இடங்களில் பெரிதான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதனால் 110 ஆக உயர்ந்துள்ளது. ஆதலால், நடக்கவிருக்கும் இடைத்தேர்தல், அதிருப்தி MLAக்கள் என எதுவும் பாதிக்காத வகையில் தேவையான பெரும்பான்மையை அதிமுக பெற்று விட்டது. ஆட்சிக்கு பங்கம் இல்லை. இனி 2 வருடங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியே தொடரும் எனலாம். ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டாலும் 2021 சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளையே சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
வேலூர் தொகுதியைத் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 39 இடங்களில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வென்றது தேனி தொகுதியில் மட்டுமே. அதில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இ.வி.கே.எஸ் இளங்கோவனை விட சுமார் 75 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வென்றிருக்கிறார். இவற்றில் கவனிக்கத்தகுந்த ஒரு விஷயம் யாதெனில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் பன்னீர் செல்வம் பிறந்த சட்டசபை தொகுதியான பெரியகுளம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இது போல, அதிமுக வெற்றி பெற்ற 9 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்தத் தொகுதிகளில் உள்ள மக்களுக்கு திமுகவை மக்களவைக்கும் அதிமுகவை சட்டசபைக்கும் அனுப்பும் இரட்டை எண்ணம் போலும். இதன் விளைவாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சி மாற்றம் நடைபெறாமல் போனது குறிப்பிடத்தக்கது.