Vizag Gas Leak: விஷவாயுவால் நிலைகுலைந்து விசாகபட்டிணம் மக்கள், மனதை உருக்கும் காட்சிகள்
புருசோத்தமன் (Author) Published Date : May 07, 2020 17:53 ISTஇந்தியா
கொரோனா ஒருபக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில், கண்ணனுக்கு தெரியாத ஒரு கொடிய விஷவாயு இன்று அதிகாலையில் விசாகபட்டிணம் மக்களை தாக்க தொடங்கின. மக்கள் காலையில் நேரத்தில் அன்றாட வேலைகளை செய்துகொண்டு இருக்கும் போது கண் எரிச்சல் மற்றும் தங்களை அறியாமல் ஒருவர் ஒருவராக மற்றவர்கள் கண் முன்னே கீழே விழ தொடங்கினார்கள்.
என்ன நடக்கிறது என்று நினைக்க கூட அவகாசம் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் மண்ணில் சாயத்தொடங்கினர். இதற்கு காரணம் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தில் உள்ள விஷவாயுக்கிடங்கில் ஏற்பட்ட கசிவினால், அருகில் வசித்த மக்களை இந்த வாயு தாக்கி இந்த சம்பவம் நிகழ்ந்ததாக உயிர்பிழைத்த மக்கள் கூறினார்கள்.
இதன் முழுவிவரம், விசாகபட்டிணம் அருகே கோபாலபட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் மற்றும் கெமிக்கல் ஆலையில் எரிவாயு கசிந்ததால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் இன்று காலை தொழிற்சாலையைத் திறக்கத் தயாரான நிலையில், அதிகாலையில் எரிவாயு கசியத் தொடங்கியது.
துரதிர்ஷ்டவசமாக, ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் இருந்து ஸ்டைரீன் வாயு கசிவு ஏற்பட்டதால், 07-மே-2020 மாலை 05:30 நிமிடம் வரை 11 பேர் இறந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்கணிப்பில் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இறந்த குடும்பங்களுக்கு, ஆந்திர முதல்வர் ரூ .1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.
நைதுத்தோட்டா பகுதிக்கு அருகிலுள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஒரு ஆலையில் இருந்து அதிகாலை 2:30 மணியளவில் தொடங்கிய எரிவாயு கசிவு கண்களில் எரியும் உணர்வையும், உடல்களில் வெடிப்பையும், சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்தியதாக குடியிருப்பாளர்கள் புகார் கூறினர்.
மயக்கமடைந்து மூச்சு விட சிரமப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் நகரத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று கேஜிஹெச் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி விரைவாக மருத்துவமனைக்கு வந்து, எரிவாயு கசிவு சம்பவம் குறித்து விசாரித்ததோடு, உயிர்களைக் காப்பாற்றவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இந்த விசவாயுவினால் ஐந்து கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின, இதில் மக்கள் மட்டுமில்லாமல் செல்ல நாய்கள், கால்நடைகள் மற்றும் பறவைகள் உட்பட பல வீட்டு விலங்குகள் இறந்துவிட்டன.
கொரோனா வைரஸ் ஊரடங்கில் ஆந்திரா மற்றும் பல இந்திய மாநிலங்கள் சில தொழில்களை விதிமுறைகளின்படி மீண்டும் திறக்க உத்தரவிட்டன, ஆனால் எரிவாயு கசிவு ஆந்திர அரசாங்கத்தையும் மத்திய அதிகாரிகளையும் வேறு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.