ads
பள்ளிபாளையம் லோகேஷ் கொரோனா ஊரடங்கால் நடந்து வரும்போது உயிரிழந்தார்
புருசோத்தமன் (Author) Published Date : Apr 03, 2020 17:54 ISTஇந்தியா
ஒரு புறம் கொரோனா வைரஸ் மூலம் உலகெங்கிலும் உயிரிழப்புகள் அதிகமாகும் இந்த சூழ்நிலையில், நாம் பார்க்க தவறிய நபர்களில் ஒருவர் தான் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த லோகேஷ் என்பாரின் மரணம்.
கொரோனா பாதிப்பு அதிகம் ஆகாமல் இருக்க இந்தியா முழுவதும் 144 தடையை அரசு பிறப்பித்தது. பிழைப்பிற்க்காக வேறு மாநிலங்களுக்கு வேலைக்காக சென்றவர்கள், 144 தடை காரணத்தினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கும், உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளமுடியாத சூழ்நிலையில் உள்ள மக்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற போது, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
இந்த போக்குவரத்துக்கு தடை காரணத்தால், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து தங்களது சொந்த மாநிலத்திற்கு நடை பயணமாகவே செல்ல தொடங்கினர், இதில் ஒருவர் தான் பள்ளிபாளையத்தை சேர்ந்த லோகேஷ். நாக்பூரில் வேலை செய்துவரும் இவர், மார்ச் 30ஆம் தேதி லாரி மூலம் பயணத்தை மேற்கொண்ட இவர், ஒரு கட்டத்திற்கு மேல், லாரி பயணம் தொடர முடியாமல் போனதால், கூட பயணம் செய்தவர்களுடன் சேர்ந்த நடக்க தொடங்கினர்.
நடந்து வரும் பாதையில், 144 தடை காரணத்தினால் உணவகங்கள் இல்லை மற்றும் இவர்களின் உணவிற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல நூறு கிலோமீட்டர், குறைந்தது 450 கிலோமீட்டர் இவர் நடந்து வந்ததால், மிகவும் சோர்வுற்ற உடம்பிற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் போனது. இவருடன் சேர்ந்து 24 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
புதன்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள மாரெட்பள்ளி போலீஸ் எல்லையில் ஒரு தற்காலிக தங்குமிடம் ஒன்றில் நீரிழப்பு மற்றும் சோர்வு காரணமாக 23 வயதான லோகேஷ் இறந்துள்ளார். இவர்களுக்கு குளியல் மற்றும் இரவு உணவு சாப்பிடுவதற்கான வசதிகள் வழங்கப்பட்டன. இரவு உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில், லோகேஷ் சரிந்து விழுந்து மயக்கமடைந்தார், இவரை பரிசோதித்த பின், இறந்ததாக அறிவிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
சடலம் ஹைதராபாத்தின் காந்தி மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், உடல் ஆம்புலன்சில் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டது. தேவையான தண்ணீர் இல்லாமல், ஓய்வு இல்லாமல் நீண்டதூரம் நடந்த சோர்வு காரணமாக மாரடைப்பால் லோகேஷ் இறந்திருக்கலாம் என்று தெலுங்கானா போலீசார் நம்புகின்றனர்.
இவர்களை போல் மக்கள் இன்றும் தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கும், மற்ற மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கும் கால்நடையாகவே சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அரசாங்கமும், இவர்கள் நடக்கும் பாதையில் உள்ள ஊர் மக்களும் தேவையான தண்ணீர் மற்றும் உணவு ஏற்பாடு செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.
கொரோனா மட்டுமே உயிர் பலி வாங்குவதில்லை, இதுபோன்ற உயிர் இழப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்வது நல்லது. அரசாங்கம் உதவிக்காக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இணைப்புகளை கொண்டு உதவிகளை பெற்றுக்கொள்வது நல்லது.