ads

ஆன்லைன் டெலிவரியில் இருந்து முற்றிலுமாக விலகப்போகிறதா ஓலா?

Ola Food Delivery

Ola Food Delivery

இந்த காலத்தில் உங்கள் கைகளில் மொபைல் ஃபோன் மட்டும் இருந்தால் போதும் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு எதை வேண்டுமானாலும் வீட்டிற்கு வரவழைக்கலாம். இந்த டெலிவெரி தொழில் நாளுக்கு நாள் தமிழகத்தில் பிரபலமாகி வருகிறது. ஆடை அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களில், மளிகை பொருட்கள் இவைகளை விட தற்பொழுது உணவு டெலிவரியில் தான் பல தனியார் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் ஸ்விகி, ஜொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்றவை உணவு வர்த்தகத்தில் கொடிக்கட்டிப் பறக்கும் நிறுவனங்களாகும்.

இந்த வரிசையில் ஃபுட் பாண்டா என்ற நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டின் இறுதியில் கையகப்படுத்தி பிரபல தனியார் போக்குவரத்து நிறுவனமான ஓலா நிறுவனம் இத்துறையில் கால்பதித்தது. ஃபுட் பாண்டா மூலமாக 18 மாதமாக இத்துறையில் செயல்பட்டு வரும் ஓலா நிறுவனம், தற்போது போட்டியாளர்களின் நெருக்கடியை சமாளிக்க இயலாமல் இத்துறையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. பல்வேறு உணவகங்களை தங்களது பட்டியலில் இருந்து ஃபுட் பாண்டா நீக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் இடைநிலை ஊழியர்கள் 40 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்டது. அதேபோல அதன் டெலிவரி ஏஜெண்டுகள் 1,500 பேரை சிறிது சிறிதாக பணிநீக்கம் செய்யப்போவதாகவும் தெரியவந்தது. ஸ்விகி, ஜொமேட்டோ போன்ற நிறுவனங்கள் உணவு வர்த்தகத்தில் அதிக அளவிலான முதலீட்டை மேற்கொள்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான ஆஃபர்களை அந்நிறுவனங்கள் அளித்து வருகின்றன. ஸ்விகி, ஜொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனகளுக்கு ஓலா ஒரு நேர் நிகர் போட்டியாளராக களமிறங்கியது. அவர்கள் கொடுக்கும் ஆஃபர்களை விட அதிகமான ஆஃபர்களை தந்து தனது வாடிக்கையாளர்களை பெருக்கிக்கொண்டது  ஓலா.

மேலும் ஓலா மற்ற நிறுவனங்களை விட அதிவேக டெலிவரி சேவையை செய்து வந்தது. அதிகப்படியான ஆஃபரகளை அள்ளிக் கொடுத்ததாலோ என்னவோ. சமீப காலமாக கொஞ்சம் தடுமாறி வருகிறது ஓலா உணவு டெலிவெரி நிறுவனம். சரியாக உணவு டெலிவரி தொழிலில் கடந்த 2015-ம் ஆண்டில் ஓலா கஃபே மூலம் ஓலா காலடி எடுத்து வைத்தது. அதன்பிறகு ஒரே ஆண்டில் அத்தொழிலை அந்நிறுவனம் கைவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஃபுட் பாண்டா உணவு வர்த்தகத்தை, அதனுடைய தரத்தை மேம்படுத்துவதற்காக, குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டும் மேற்கொள்ள ஓலா முடிவு எடுத்துள்ளது. முழுவதுமாக உணவு டெலிவரியை நிறுத்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் ஓலா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது உணவு டெலிவரி துறையில் குறிப்பிட்ட அளவில் வெளியேறினாலும், அதன் பிரத்தியேக கிளவுட் கிச்சன் சேவையை மட்டும் ஓலா தொடர உள்ளதாக தெரிகிறது.

ஆன்லைன் டெலிவரியில் இருந்து முற்றிலுமாக விலகப்போகிறதா ஓலா?