சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து
விக்னேஷ் (Author) Published Date : Apr 27, 2022 16:01 ISTஇந்தியா
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 3வது செக்டர் கட்டிடத்தின் பின்புறம் உள்ள சேமிப்பு அறையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதாக தெரிகிறது. எனவே அந்த கட்டிடத்தின் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2வது கோபுரத்தில் உள்ள சேமிப்பு அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.