நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சூர்யாவிற்கு அறிவுறுத்தலும் பாராட்டும்
விக்னேஷ் (Author) Published Date : Sep 19, 2020 11:21 ISTஇந்தியா
நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களின் நிலையை நடிகர் சூர்யா தனது தனிப்பட்ட கருத்தை சில நாட்களுக்குமுன் தெரிவித்தார். அதில் நீட் தேர்வை மட்டுமில்லாமல் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் இவரது அறிக்கை இருந்தது.
நீட் தேர்வை பற்றி சூர்யா கூறியது, ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவுமில்லை.
நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தை பற்றி சூர்யா கூறியது, தங்களது உயிருக்குப் பயந்து காணொளி மூலம் நீதிபதிகள் வழக்குகளை நடத்துகிறார்கள் ஆனால் மாணவர்களை அச்சமில்லாமல் போய்த் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு விடுகிறார்கள்.
நீதிமன்றங்களுக்கு எதிராக சூர்யா இப்படி பேசியது பெரிய சர்ச்சையானது. இதனால் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுக்க கோரி நீதிபதி சுப்ரமணியம் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த வழக்கில் செப்டம்பர் 18ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது. அதில் சூர்யாவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு விசாரணை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தது, நடிகர் சூர்யா இது போன்ற தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவேண்டும். நாட்டின் பொது விவகாரங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது மிக கவனமாக பேச வேண்டும்.
உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த கொரோனா தாக்கத்திலும், நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் பேசக்கூடாது. சுமார் 42,233 வழக்குகள் இந்த கொரோனா தொற்று அதிகம் இருக்கும் இந்த காலகட்டத்திலும் நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு முடித்து வைத்துள்ளது.
இனிமேல் நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமதிக்கும் வகையில் சூர்யா எந்த ஒரு கருத்தையும் கூறக்கூடாது. சூர்யாவின் சமூக சேவைகளை நீதிமன்றம் பாராட்டுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு நடிகர் சூர்யா தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து, இந்த தீர்ப்பை தாழ்ந்த பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.