ads
ஹைதராபாத்தில் சிறுமி சைத்ரா வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்
ராசு (Author) Published Date : Sep 13, 2021 17:07 ISTஇந்தியா
ஹைதராபாத்தில், 6 வயது பெண் குழந்தை பக்கத்து வீட்டு அரக்கனால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி செய்தி நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது, மேலும் சிறுமி சைத்ராவுக்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் மக்கள் தங்களது துக்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சைதாபாத் காவல் நிலையத்தில் 6 வயது சிறுமியின் பெற்றோர் தங்கள் குழந்தையை காணவில்லை என்று புகார் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
ஆனால் சிறுமி சைத்ரா குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சந்தேகப்படும் நபர்கள் குறித்து விசாரித்தனர். அந்த சமயத்தில், சைத்ராவின் அம்மா பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு நபரை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
விசாரிக்கும் போது, சிறுமி காணாமல் போன பிறகு பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜு என்ற 30 வயது நபரை காணவில்லை என்பது தெரிந்தது.
இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிப்பவர் மீது புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, பூட்டியிருந்த அந்த நபரின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அங்குதான் அவர்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கும் வகையில் சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு, பெட்ஷீட்டில் மூடப்பட்டிருந்த சிறுமி சைத்ராவின் உடல் அரை நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்கள்.
பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, பல இடங்களில் காயங்கள் ஆழமாக இருந்தன, அவளது தலையிலும் ஒரு அடி பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுளளார் என்பது உறுதியானது.
இந்த கொடூர சம்பவத்தை செய்த கொடூரன், சிறுமியின் உடலில் கடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. ஒரு குழந்தையிடம் இவ்வாறு நடந்து கொண்ட கொடூரன், இதற்கு முன்பு அந்த சிறுமியுடன் நட்பாக பழகியதால், பெற்றோர் இவனை நம்பியதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நீதி கேட்டு சம்பாப்பேட்டை-கர்மன்காட் சாலையில் போராட்டம் நடத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
அப்பாவி குழந்தைக்கு எதிராக மிக மோசமான செயலை செய்த அரக்கனின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபரை உடனடியாக கைது செய்யவும், சிறுமியின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் இழப்பீடு வழங்கவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்த கடத்தல் தொடர்பாக போக்சோ உள்பட மற்ற வழக்குகளிலும் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர் போலீசார்.
சைத்ரா தனது நண்பர்களுடன் விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது பார்க்க மிகுந்த வேதனையாக அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சைத்ராவுக்கான நீதி கேட்கும் படலம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த வாரத்தில் டெல்லியில் உள்ள ஒரு பெண் காவல்துறை அதிகாரி "ரபியா சைபி" பாலியல் வன்கொடுமை செய்து கொல்லபட்டுள்ளார், இது போன்ற செய்திகள் தினமும் வந்தாலும் அரக்கர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். கடுமையான சட்டமே இதற்கு ஒரு தீர்வை தரும் என பொதுமக்கள் அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.