மீண்டும் கமல் சினிமாவிலா ? அப்போ அரசியல் ?
கார்த்திக் (Author) Published Date : May 11, 2019 11:49 ISTபொழுதுபோக்கு
கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா போன்ற இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில், நாட்டிற்கு ஒரு நல்ல தலைமை அமையவில்லை என்பதற்கு கடந்த சில வருடங்களாக நடந்து வரும் நிகழ்வுகளே சாட்சி. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலைக் குறிவைத்து கட்சியை முன்னிறுத்தும் பட்சத்தில் தன்னுடைய சினிமா செல்வாக்கை அரசியல் செல்வாக்காக மாற்றுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற முனைப்பில், கடந்த வருடம் பிப்ரவரி மாதம், "மக்கள் நீதி மய்யம்" என்ற புதுக் கட்சியை தொடங்கினர், டாக்டர் கமல்ஹாசன்.
மக்களை சந்தித்து தனக்கே உரித்தான பாணியில் பேசி நாட்டின் நிலவரம் குறித்து எடுத்துரைத்து அரசியலில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி வந்தார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் தேர்தல் சின்னமாக அவருக்கு டார்ச்லைட் வழங்கப்பட்டது.
எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை முன்னிறுத்தி தனியாகவே தேர்தலை சந்தித்திருக்கிறார். அது மட்டுமல்லாது, சட்ட மன்றத்திற்கான இடைத் தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். இளைஞர்களின் ஆதரவு நிச்சயம் தனக்கு கிட்டும் என்கிற அவருடைய நோக்கத்திற்கு வெற்றி கிட்டுமா ? தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகே தெரியும்.
எனினும், நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்றே 1970குகள் தொடங்கி இன்று வரை பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும் காரணத்தினால், சொல்லிக்கொள்ளும்படியாக கணிசமான வாக்குகளையாவது அவர் நிச்சயம் ஈட்டுவார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்சி ஆரம்பித்த பின், சினிமாவில் தான் நடிக்கும் கடைசி படம், "இந்தியன் 2" மட்டுமே என்று கடந்த டிசம்பர் மாதம் கூறியிருந்தார், கமல்ஹாசன். சமூக பிரச்சனைகளைப் பற்றின பேட்டிகளில், "தான் ஒரு முழு நேர அரசியல்வாதி அல்ல, அரசியலில் முழுவதுமாக ஈடுபடும் போது, உங்கள் கேள்விகளுக்கு பதில் தருகிறேன்" என்று ரஜினியைப் போல, பட்டும் படாமல் பேசாமல், தீர்க்கமாகவே ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று பலரும் பாராட்டினர். கமலின் இந்த முடிவு அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்பதை எவரும் மறுக்க இயலாது.
இந்நிலையில், தற்போது சினிமா வட்டாரத்தில் இருந்து வெளிவரும் தகவல்கள் படி, "இந்தியன் 2" படத்திலிருந்து லைக்கா நிறுவனம் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இந்தப் படத்திற்கான பிரச்சனை தீர்வதற்குள், "தேவர்மகன் 2" படத்தை தயார் செய்து விடலாம் என்று கணக்கு போட்டுள்ளார் போலும். இந்தப் படத்திற்கான வேலைகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
1992ல் கமல்ஹாசன் கேரியரில் மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்த படம் தான், "தேவர்மகன்". இதில், சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில், பங்க் ஹேர் விட்டு நடித்திருப்பார், கமல். நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் கதாபாத்திரம் இன்று வரை பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பிட்ட சமுதாயத்தை மையப்படுத்திய படம் என்பதால் அன்றே சர்ச்சைகளை எதிர்கொண்டார், கமல்.
கமல் இயக்கி நடித்த "விருமாண்டி" படத்தின் தலைப்பிற்கே பெரிதாக சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், "தேவர்மகன் 2" படத்திற்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை யூகிக்க முடியவில்லை. இருந்த போதும், கமல், தற்போது, ஒரு கட்சியின் தலைவர் என்பதால், அவற்றை சமாளிக்க அரசியல் செல்வாக்கு துணை புரியும் என்று நம்பலாம்.
சினிமாவிற்கு "இந்தியன் 2" படத்தோடு முழுக்கு என்று கூறிய கமல், தற்போது "தேவர்மகன் 2" படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் இறங்கி விடுவாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது, இந்த செய்தி.