மனித கம்பியூட்டராக மாறும் பாலிவுட் நடிகை வித்யாபாலன்
கௌரிசங்கர் (Author) Published Date : May 08, 2019 17:44 ISTபொழுதுபோக்கு
இந்திய திரையுலகில் பயோபிக் திரைப்படங்கள் அதிகரித்து வருகிறது. முன்னணி பாலிவுட் நடிகர்கள் பலர் முக்கியத்துவம் வாய்ந்த, புகழ்பெற்ற மற்றும் சாதனை படைத்த இந்திய பிரபலங்களின் நிஜ வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி அதில முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் புதிய படம் சல்யூட் இந்த படம் முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் ராகேஷ் ஷர்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம். பாலிவுட் நடிகர் அஜய் தேவகன் ஒரு புதிய படத்தில் முன்னாள் இந்திய கால்பந்தாட்ட பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் ஆக நடித்து வருகிறார் அவருக்கு மனைவியாக தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.
இந்த வருசையில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் இந்தியாவை சேர்ந்த மனித கம்பியூட்டர் என்று அழைக்கப்படும் ஜீனியஸ் சகுந்தலாதேவியாக நடிக்க உள்ளார். கணித மேதை சகுந்தலாதேவி பெங்களூரைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே சுயமாக கணக்கு பாடங்களைக் கற்றார். சிக்கலான கணக்குகளுக்கு சில நொடிகளில் தீர்வு சொன்னார். இவரது திறமை உலகம் முழுவதும் பரவியது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார் ஜீனியஸ் சகுந்தலாதேவி. கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 83வது வயதில், உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். தற்போது சகுந்தலாதேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது.
இதில் சகுந்தலாதேவி வேடத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில், நடிக்க 'தங்கள்' இந்தி படம் மூலம் பிரபலமான சரண்யா மல்கோத்ராவிடம் பேசிவருகிறார்கள். வித்யாபாலன் ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் உருவான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் தயாரான என்.டி. ராமராவ் வாழ்க்கை கதையில் அவரது மனைவி பசவதாரகம் வேடத்தில் நடித்தார். மேலும் நமது தல அஜீத் குமார் அவர்களுக்கு ஜோடியாக இயக்குனர் வினோத் இயக்கி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த பிங்க் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் நடிகை வித்யாபாலன்.
சகுந்தலாதேவியாக வித்யாபாலன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் பாலிவுட் இயக்குனர் திரு.அனு மேனன். அபண்டன்ட்டியா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் திரு.விக்ரம் மல்ஹோத்ரா இந்த படத்தை தயாரிக்கின்றார் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் ஹிந்தி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.