ads
மிஸ்டர் லோக்கல் படம் எப்படி, சிவகார்த்திகேயன் படம் திரை விமர்சனம்
கார்த்திக் (Author) Published Date : May 17, 2019 18:05 ISTபொழுதுபோக்கு
ராஜேஷ் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினும் ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். பொதுவாக, ராஜேஷ் இயக்கும் படங்களில் கதையை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், காமெடியை மையப் படுத்தியே கதைக்களம் நகரும். அவ்வகையில், இந்தப் படமும் விதி விலக்கு அல்ல. SMS, OK OK, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் ராஜேஷுக்கு பெரிய வெற்றிகளைத் தந்தன. ஆனால், அதற்கு பின்னர், அவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பெரிதான வரவேற்பை பெறத் தவறியது.
முழு நீளமாக காமெடி படம் எடுத்து ரசிகர்களை இருக்கையில் அமர வைப்பது சாதாரண காரியம் அல்ல. அவ்வகையில், ராஜேஷ் படங்களிலும் சிவகார்த்திகேயன் படங்களிலிலுமே இது போன்ற கதைக் களத்தை நாம் எதிர்பார்க்க முடியும். அவ்வகையில், சிவகார்த்திகேயன் - ராஜேஷ் கூட்டணி புதுவிதமாக அமைந்துள்ளது. இந்தப் படம் இருவருக்கும் ஒரு சிறந்த கம்பேக் எனலாம். ராஜேஷ் படங்களில் ஆஸ்தான காமெடியனாக சந்தானம் விளங்குவார். இம்முறை, அந்த இடத்தை சதீசும் யோகி பாபுவும் நிரப்பி இருக்கிறார்கள். கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கும் திமிரான CEO வாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பு அட்டகாசம். அவரைத் தவிர வேறு எந்த ஹீரோயினும் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருந்த மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், நாயகனுக்கு இணையான வெயிட்டான கதாபாத்திரம் இது.
படத்தில் இடம் பெற்றிருக்கும் கதாபாத்திரங்களில், யோகி பாபு தான் அதிகமாக பேசப்படுகிறார். படத்தின் முதல் பாதி சுமாராக சென்றாலும், இரண்டாம் பாதி ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் ரசிகர்கள் என்ன எதிர்பார்பார்களோ அதை இயக்குனர் ராஜேஷ் பூர்த்தி செய்திருக்கிறார் என்று சொல்லலாம். தன்னுடைய படங்களுக்கு நன்றாக இசை அமைத்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா இந்தப் படத்தில் சொதப்பி இருக்கிறார். காமெடிக் காட்சிகளில் வரும் சில மொக்கையான வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
யோகி பாபு இடம் பெரும் காட்சிகள்தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. ஆங்கில வசனங்கள் மூலம் காமெடி ட்ராக் போட்டிருக்கிறார், ரோபோ ஷங்கர். அவரை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். தம்பி ராமய்யா, ராதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யோகி பாபுவுக்கு அடுத்ததாக ராதிகாவின் காமெடி காட்சிகளும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இந்தப் படத்தில், காமெடிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நட்சத்திரங்களும் அவரவர் பங்கை சிறப்புடன் செய்துள்ளனர்.
அஜித், விஜய்க்கு அடுத்ததாக, பெரிய ஓப்பனிங் கிடைப்பது சிவகார்த்திகேயன் படங்களுக்கே. இருந்தாலும், சிவகார்த்திகேயன் படங்களுக்கான ஓப்பனிங்களிலேயே இந்தப் படத்திற்கு தான் குறைவான முன்பதிவு நடந்துள்ளது. அதற்குக் காரணம், அவருடைய முந்தைய படமான சீம ராஜா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனலாம். ஆனால், இந்தப் படத்தில் அதை ஈடு செய்திருக்கிறார்.இறுதியாக, படத்தை ஒரு முறையேனும் பார்த்து ரசிக்கலாம். மீண்டும் பழைய சிவகார்த்திகேயனை பார்த்த மாதிரி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இடைச் சொருகல்களாக சமூக பிரச்சனைகள் சிலவற்றிற்கும் சிவகார்த்திகேயன் குரல் கொடுத்திருக்கிறார்.