எப்போது வருகிறார் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி? இயக்குனரின் பதில் இதோ
கௌரிசங்கர் (Author) Published Date : May 20, 2019 21:29 ISTபொழுதுபோக்கு
ஒரு காலத்தில் காமெடி நடிகர் வைகைப்புயல் திரு.வடிவேலு அவர்கள் காமெடியில் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்தார். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார் நடிகர் வடிவேலு. அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவரது காமெடி வீடியோக்களை போடாத தொலைகாட்சிகளே இல்லை. இன்றும் சிறுவர்களை தொலைகாட்சியின் வாயிலாக சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார் நமது வைகைப்புயல் வடிவேலு.
பல அரசியல் காரணமாகவும், குடும்ப சூழல் காரணமாகவும், தயாரிப்பு நிறுவனத்திலும், நடிகர் சங்கத்திலும் இருந்த பிரச்சனை காரணமாகவும் அப்படி நடிக்காமல் இருந்தார் வடிவேலு, ஆனாலும் அவர் காமெடிகள் எப்படியும் நம்மிடம் தினமும் வந்து சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. பின்னர் வடிவேலுவுக்கும் படக்குழுவினருக்கு, தயாரிப்பாளருக்கும் பிரச்சனை வரவே அவர் ஷூட்டிங்கிற்கு வருவதை குறைத்துகொண்டார்
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து வடிவேலுவுக்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டது. புலிகேசி பட பிரச்சனைகளை முடித்த பிறகே வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டது. படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் இதனால் பல நஷ்டங்களை அடைந்து வடிவேலு பேரில் நஷ்ட ஈடு வழக்கும் போட உள்ளதாக வதந்திகளும் தமிழ் சினிமாவில் பரவி வருகிறது. இயக்குனர் ஷங்கர் "இந்தியன் 2" படத்தில் பிஸியான பிறகு இந்த படம் அப்படியே நிலுவையில் நிற்கிறது.
"இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி" படத்தை இயக்கிய இயக்குனர் திரு.சிம்பு தேவன் அவர்களே இந்த படத்தின் இரண்டாம் பாகமான "இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி" படத்தையும் இயக்குகிறார். இடையில் வடிவேலுக்கு பதிலாக நடிகர் யோகிபாபுவை வைத்து படத்தை ஆரம்பிக்க நினைத்தனர் ஆனால் அந்த தகவலும் இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் நிலவரம் பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் இயக்குனர் சிம்பு தேவன் அவர்கள். இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சிம்பு தேவன். இந்த படத்தில் இணைந்தது சிறப்பான செய்தி என்றும், "இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி" படம் பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.