அவதார் 2 என்னைக்கு ரிலீஸ் தெரியமா? அதிகாரப்பூர்வ தகவல் இதோ
கௌரிசங்கர் (Author) Published Date : May 09, 2019 15:06 ISTபொழுதுபோக்கு
டைட்டானிக் புகழ் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு உலக அளவில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வெற்றிபெற்றது. இந்த படத்தின் குளோபல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த பத்து வருடத்தில் இந்த இமாலைய சாதனையை இது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும், மூன்றாம் பாகத்தையும் ஒரு சேர கடந்த பத்து வருடங்களாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவர்கள். மேலும் படத்தின் நான்காம் மற்றும் ஐந்தாம் பாகங்களையும் எடுக்கபோவதாகவும் அறிவித்திருந்தார்.
படத்தின் மூன்றாம் பாகத்தில் டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் முக்கிய வேடத்தில் நடித்து வருவதும் தெரியவந்துள்ளது. பத்து வருடங்கள் ஆகியும் இந்த படத்தின் புதிய பாகத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள் கோடான கோடி பேர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் கதாநாயகி அளித்த பேட்டியில் ஒன்றில் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருப்பதில் பெருமைப்படுகிறேன். முதல் பாகத்திற்கு மேலாக எங்களது உழைப்பையும் பங்களிப்பையும் அளித்திருக்கிறோம். அடுத்து வரப்போகும் படங்கள் முதல் பாகத்தைவிட ஆழமாக ரசிகர்கள் மனதை நிச்சையம் கவரும். அது படம் வெளியானால் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
அவதார் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. படம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது வால்ட் டிஸ்னி. இந்த செய்தியை கேட்டு படத்தின் ரசிகர்கள் கொஞ்சம் சோர்வடைந்துள்ளனர். இருந்தும் படத்தின் மீதான ஆர்வம் மட்டும் இன்னும் குறையவில்லை என்று வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். படம் தாமதமாவதற்கு முக்கிய காரணம் படத்தின் கிராபிக்ஸ் குறித்த வேலைகள் இன்னும் முழுமை அடையாதது தான் என்கின்றனர் சிலர்.
அவதார் படத்தின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியானது ஆனால் அந்த படத்தின் பணிகள் பத்து வருடத்திற்கு முன்னதாக ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ரொம்பவும் நுணுக்கமான காட்சியமைப்பை உருவாக்குபவர். அந்த கடின உழைப்பின் விளைவு படத்தில் வரும் பண்டோரா எனும் வேற்றுகிரக உலகத்தையும் வேற்றுகிரக வாசிகளையும் அவ்வளவு தத்ரூபமாக நமக்கு காண்பித்தார். அதே போல இந்த இரண்டாம் பாகத்திற்கு இன்னும் பத்துமடங்கு வேலைகள்
அதிகரித்துள்ளாராம் இயக்குனர். அதனால் தான் இந்த கால தாமதம் என்கின்றனர் சிலர். எது எப்படியோ 2021 ஆம் ஆண்டு நாம் மீண்டும் பாண்டோரா உலகத்திற்குள் பயணிக்கப் போவது உறுதி.