அதர்வா ஹன்சிகாவின் 100 படம் இன்று ரிலீஸ் இல்லை, இயக்குனர் வருத்தம்
கார்த்திக் (Author) Published Date : May 09, 2019 16:59 ISTபொழுதுபோக்கு
இந்த வார சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதர்வாவின் 100 படம் நாளை வெளியாகவில்லை. சென்ற வாரம் 3ம் தேதியே வெளியாக வேண்டிய இந்தப் படம் இன்றும் வெளியாகப் போவதில்லை என்பதால் ட்விட்டரில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார், இயக்குனர் சாம் ஆண்டன். 2015ல் டார்லிங், 2016ல் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை எழுதி இயக்கியவர் சாம் ஆண்டன், இவருடைய 3வது படமான 100 படத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி, ராதாரவி, யோகி பாபு ஆகிய பலர் நடிக்கின்றனர். அதர்வா முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது ஒரு போலீஸ் கதை என்பதால், ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே படத்தைப் பார்க்க ஆர்வம் இருந்தது.
100 படம் மே 3ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டது. இந்நிலையில், பலூன் திரைப்படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி எம்.ஜி. ஆரா சினிமாஸ் நிறுவனம் தனக்கு சேர வேண்டிய பணத்தை இன்னும் செலுத்தவில்லை என்று கூறி 70 எம்.எம்.என்டெர்டெய்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரர் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏப்ரல் 30ம் தேதி 100 படத்திற்கு இடைக் காலத் தடை விதித்தார். இதனால், கடந்த 3ம் தேதி வெளியாக இருந்த 100 படம் இந்த வாரம் 9ம் தேதிக்குத் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், படக் குழுவினர், படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால், இரு தரப்பினருக்கும் இடையே பணப் பிரச்சனை தீர்க்கப்படாத நிலையில், படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன், நேற்று இரவு தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது, படக் குழுவினர் அனைவர்க்கும் நன்றி ! படம் வெளியாகததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நாளையும் படம் வெளியாகப் போவதில்லை ! என்னுடைய பணியை நான் முடித்து விட்டேன். படம் வெளியாகும் போது, என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னுடைய அடுத்த படமான கூர்காவில் கவனம் செலுத்தப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். தடை இருந்தாலும் பிரச்சனைகள் தீர்ந்து படம் ரீலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இயக்குனரின் இந்த ட்விட்டர் கருத்து பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.