ads
தடைகளைத் தாண்டி வெளிவந்த 100 படம் விமர்சனம்
கார்த்திக் (Author) Published Date : May 11, 2019 11:55 ISTபொழுதுபோக்கு
100 படத்தின் மீது உயர்நீதி மன்றம் விதித்திருந்த இடைக் காலத் தடை நீக்கப்பட்டு படம் இன்று (மே 10) திரைக்கு வந்திருக்கிறது. அதற்கான விமர்சனம் கீழ் வருமாறு. ஆரா சினிமாஸ் தயாரிப்பில் டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் தயாரிப்பில் அதர்வா, ஹன்சிகா, யோகி பாபு, ராதா ரவி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் 100.
போலீஸ் அதிகாரியாகி குற்றவாளிகளை பந்தாட வேண்டும் என்று லட்சியம் மிக்க, வேகம் மிக்க இளைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அதர்வா. படத்தின் ட்ரைலரில் பெண்கள் கொடுமைக்கு எதிராகவும் பெண்கள் பாதுகாப்புக்கு ஆதரவாகவும் வீர வசனங்கள் பேசி இருப்பார். அப்படி என்றால், உயர் அதிகாரியாக இருந்து பெரிய வில்லன்களை சமாளிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்றே எண்ணத் தோன்றும்.
ஆனால், படத்தின் முதல் பாதியில் அதற்கு நேர்மாறாய் போலீஸ் டிபார்ட்மென்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அவர் பணியாற்ற நேர்கிறது. சந்தேகப்படும் நபர்களுடைய மொபைல் கால்களை கேட்கும் பணியில் ஈடுபடுத்தப் படுகிறார். சலிப்பு மிகுந்த வேலையை செய்கிறோமே என்ற உணர்வோடு பணியாற்றும் சூழலில், அவருக்கு வரும் 100வது கால் படத்தின் திருப்பு முனையாக அமைகிறது.
அதன் மூலம், ஒரு இளம் பெண்ணைக் கடத்தியது பற்றிய விவரங்களைக் கேட்டறிகிறார். பின்பு, கட்டுப்பாட்டு அறையின் சூழலை எப்படி தனக்கு சாதகமாக்கி அந்த குற்றவாளிகளை வேட்டையாடுகிறார், எவ்வாறு அந்தப் பெண்ணை மீட்கிறார் என்பதே படத்தின் மீதி கதை. பெண்களுக்கான குற்றங்களை மையப்படுத்திய கதைகளும் ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகளும் தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டாகி இருப்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வரிசையில் வந்திருக்கும் படம் தான் 100. அதர்வா முதன் முறையாக போலீஸ் வேடத்தில் தன்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்த போதும், அவருக்கான சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது, அவரை மாஸ் ஹீரோவாக நினைக்க முடியவில்லை. அதர்வாவிற்கு ஜோடியாக ஹன்சிகா மொட்வானி நடிக்கிறார். அதர்வாவிற்கும் ஹன்சிகாவிற்குமான காதல் காட்சிகள் பொருந்த வில்லை. அதோடு, ஹன்சிகாவின் நடிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இல்லை.
சாம் CS அவர்களின் இசை கதைக்கு நன்றாக வலு சேர்த்திருக்கிறது. யோகி பாபு காமடியும் அவருடைய டையலாக் டெலிவரியும் தியேட்டரில் மக்களுக்கு மிகுந்த நகைப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ். இந்தப் படத்தில் யோகி பாபு முழு நேர காமெடியனாக படம் முழுவதும் பயணிக்கிறார். ராதாரவி அவர்களின் கதாபாத்திரமும் படத்தில் பெரிதாக பேசப்பட்டிருக்கிறது.
அதர்வா, ஹன்சிகா நடித்த சமீபத்திய படங்கள் பெரிதாக கை கொடுக்காத காரணத்தால், இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் கட்டாய வெற்றியை நோக்கியே இருவரும் களமிறங்கி இருக்கின்றனர். படத்தின் திரைக்கதை அனைத்தும் கலந்த விதமாய் அமைந்திருக்கிறது. ஏனெனில், சலிப்பான மற்றும் சுவாரசியமான காட்சிகளும் சேர்ந்தே வருகின்றன.
மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் அளவிற்கு படத்திற்கான கரு இருந்தாலும் இயக்குனர் சாம் ஆண்டன் இன்னும் மெருகேற்றி இருக்கலாம் என்பதே படம் பார்த்த ரசிகர்களின் கருத்து.இது ஒரு கிரைம் த்ரில்லர் படம் என்பதால் தேவையில்லாத காட்சிகளை நீக்கி இருந்தால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் கூடி இருக்கும்.